வேலுார் - தாம்பரம் பேருந்து வாரணவாசியில் நிறுத்த கோரிக்கை
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது வாரணவாசி. இக்கிராமம் வாலாஜாபாத் - தாம்பரம் சாலையில் உள்ளது. வாரணவாசியை சுற்றி அகரம், தொள்ளாழி, குண்ணவாக்கம், மேல்பாக்கம், ஆம்பாக்கம், வெண்பாக்கம், அளவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களைச் சேர்ந்தோர், வாரணவாசிக்கு வந்து, அங்கிருந்து பேருந்து வாயிலாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒரகடம், பெரும்புதுார் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், வாரணவாசி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.இந்த தொழிலாளர்களும், இப்பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, பேருந்து வாயிலாக பயணம் செய்கின்றனர். வாரணவாசி வழியாக இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளும், இப்பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.ஆனால், வேலுாரில் இருந்து, வாரணவாசி வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும், தடம் எண்: 155 என்ற அரசு பேருந்து மட்டும் வழிநில்லா பேருந்தாக உள்ளது.இதனால், வாரணவாசி சுற்றுவட்டார கிராமவாசிகள், பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பேருந்து இயக்கப்பட்டும், அதில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாக புலம்புகின்றனர்.மேலும், வேலுார், ராணிப்பேட்டை, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வாரணவாசி சுற்றுவட்டார பகுதி தொழிற்சாலைகளுக்கு வருவோரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, வேலுார் - தாம்பரம் வரை இயக்கப்படும் தடம் எண்: 155 என்ற அரசு பேருந்தை, வாரணவாசியில் நிறுத்தம் செய்து இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.