அரைகுறை வளர்ச்சி பணிகளால் வாலாஜாபாத் பகுதிவாசிகள் அவதி
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், 30.80 லட்ச ரூபாய் செலவில், மகிமை தாஸ் தெரு, பாரதி நகர், அருமை நாயகம் தெரு ஆகிய தெருக்களில், சிமென்ட் சாலை மற்றும் போஜகார தெருவில் சிறுபாலம் ஆகிய கட்டுமான பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்று உள்ளன.இதில், பாரதி நகரில் சாலை போட்ட சில தினங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், போஜகாரத்தெருவில் சிறுபாலம் கட்டுமான பணி அரைகுறையாக முடிக்கப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் பல்வேறு சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. குறிப்பாக, போஜகார தெருவில் செல்லும் வாகன ஓட்டிகள், புதிய சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்பு இல்லாததால், கால்வாயில் கவிழும் அபாயம் உள்ளது. மேலும், கால்வாய் குறுக்கே முட்டுக்கொம்புகள் அகற்றாததால், கழிவுநீர் அடைப்பு மற்றும் பாரதி நகரில் போடப்பட்ட சிமென்ட் சாலை வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பேரூராட்சி நிர்வாகம் அரைகுறையாக முடிக்கப்பட்ட சிறுபாலத்தில் இருபுறமும் தடுப்பு மற்றும் பாரதிநகரில் புதிய சிமென்ட் சாலை சேதத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.