உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிரம்பி வரும் நீர்நிலைகளுக்கு செல்ல கட்டுப்பாடு விதிப்பு ...கெடுபிடி: 10 ஆண்டுகளில் 222 பேர் பலியால் முன்னெச்சரிக்கை

நிரம்பி வரும் நீர்நிலைகளுக்கு செல்ல கட்டுப்பாடு விதிப்பு ...கெடுபிடி: 10 ஆண்டுகளில் 222 பேர் பலியால் முன்னெச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழை, வெள்ளம், இடி, மின்னல் போன்ற காரணங்களால், 10 ஆண்டுகளில் 222 பேர் இறந்துள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் ஏரி, ஆறுகளில் நீர்வரத்து துவங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளில் குளிக்கவோ, 'செல்பி' எடுக்கவோ வேண்டாம் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், இயல்பைவிட இந்தாண்டு கூடுதலாக மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனால், அக்., - நவ., - டிச., ஆகிய பருவமழை காலங்களில், பொது மக்கள் கவனமாக இருக்க, பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அதிக நீர்நிலைகள் உடைய மாவட்டங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில், பருவமழை பாதிப்பை தடுக்க, தேவையான முன்னேற்பாடுகளை எடுக்க, பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது. கவனக்குறைவு மாவட்டத்தில், செம்பரம்பாக்கம், மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதுார், தாமல், உத்திரமேரூர் போன்ற பெரிய ஏரிகள், மழைக்காலத்தில் நிரம்புகின்றன. அதேபோல் பாலாறு மற்றும் செய்யாறு ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும். வடகிழக்கு துவங்கியுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வரும் செய்யாற்றில், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதுபோல், ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருவதால், பொதுமக்கள் பலரும் நீர்நிலைகளில் குளிக்கவும், 'செல்பி' எடுக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு, நீர்நிலைகளில் கவனக்குறைவாக இறங்கியவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். நீர்நிலைகளில் சிக்கி இறப்பது மட்டுமல்லாமல், மழை நேரத்தில் வயல் வெளிப்பகுதியில் தனியாக செல்வது, மரத்தடியில் நிற்பது போன்ற காரணங்களாலும் இடி, மின்னல் தாக்கி பலர் உயிரிழக்கின்றனர். மின்கம்பங்களில் மின் கசிவு காரணமாகவும், அறுந்து விழுந்த மின் கம்பிகளை மிதித்ததாலும் பலர் உயிரிழந்துள்ளனர். Galleryகாஞ்சிபுரம் மாவட்டத்தில், 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது, நீர்நிலைகளில் அடித்து செல்லப்பட்டும், ஏரியில் மூழ்கியும், இடி, மின்னல் தாக்கியும் 165 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 2016ல் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட, 'வர்தா' புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 16 பேர் இறந்தனர். தவிர ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. அடுத்தடுத்து ஆண்டுகளில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு பலர் இறந்துள்ளனர். கோரிக்கை கடந்த 2015 முதல் 2025 அக்., மாதம் வரை, 222 பேர் மழை, வெள்ளம், மின்சாரம், இடி, மின்னல் போன்ற காரணங்களால் இறந்துள்ளனர். அதேபோல், நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுபோன்ற உயிர்பலி அசம்பாவிதம் இந்தாண்டு நடக்காமல் இருக்க, தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டிற்கான வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இ துசம்பந்தமான அறிவிப்பு பலகைகள் நீர்நிலை பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ளது. மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் இறந்தவர்களின் விபரம் ஆண்டு இறப்பு 2015 (பெருமழை) 169 2016 (வர்தா புயல்) 16 2017 4 2018 2 2019 7 2020 (நிவர் புயல்) 4 2021(பெருமழை) 6 2022 4 2023 4 2024 6 மொத்தம் 222

கட்டுப்பாட்டு அறை திறப்பு

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் சம்பந்தப்பட்ட புகார்களை பொதுமக்கள், 044 - 2723 7107 என்ற எண்ணிலும், 80562 21077 என்ற 'வாட்ஸாப்' எண்ணிலும் புகாராக தெரிவிக்கலாம். எச்சரிக்கை பலகை மாவட்டத்தின் பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி 20 அடி ஆழம், 1.1 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீரை கொண்டு, 15 கிராமங்களில் 5,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. 18 மதகுகளின் வழியே கால்வாய்களில் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. உபரி நீர் வெளியேறி வருவதை காண்பதற்காக பொதுமக்கள் அதிகமானோர் ஏரிக்கு வருகின்றனர். அவ்வாறு வருவோர், ஆபத்தை உணராமல், ஏரியில் குளிக்க கலங்கல் பகுதிக்கு செல்கின்றனர்.இதை தடுக்க, ஏரியில் உள்ள கலங்கல் மற்றும் கரைகளின் மீது ஐந்து இடங்களில், நீர்வளத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்க்கண்டன் கூறுகையில், ''உத்திரமேரூர் ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், மூன்று கலங்கல்கள் வழியே உபரி நீர் வெளியேறி வருகிறது. இதை காண்பதற்காக வரும் பொதுமக்கள், குளிக்க முயற்சிக்கின்றனர். இதை தடுக்க ஐந்து இடங்களில், 'ஏரியில் குளிக்கக் கூடாது' என்ற எச்சரிக்கை பலகை வைத்துள்ளோம்,'' என்றார். -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ