உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேர் வராததை கண்டித்து குண்ணத்தில் சாலை மறியல்

தேர் வராததை கண்டித்து குண்ணத்தில் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதுார்:குண்ணம் மூங்கிலியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது, தங்கள் பகுதிக்கு தேர் வராததைக் கண்டித்து, சில தெருக்களைச் சேர்ந்த பிரிவினர் சுங்குவார்சத்திரம் -- வாலாஜாபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தை அடுத்த, குண்ணம் கிராமத்தில், மூங்கிலியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 10 நாள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு, செப்., 2ம் தேதி, காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மூங்கிலியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். அப்போது, சில தெருக்களைச் சேர்ந்த பிரிவினர், அம்மனுக்கு தாய் வீட்டு சீர்வரிசை கொண்டு வந்தனர். இந்த நிலையில், தேரை அப்பகுதிக்கு திருப்ப, மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர் தங்கள் பகுதிக்கு திருப்பப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில தெருக்களைச் சேர்ந்த பிரிவினர் வாலாஜாபாத் -- சுங்குவார்சத்திரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் வசந்தி, ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி., கீர்த்திவாசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். அப்போது, போலீசாரிடம் சில தெருக்களைச் சேர்ந்த பிரிவினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சில், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், நேற்று முன்தினம் இரவு சுங்குவார்சத்திரம் -- வாலாஜாபாத் சாலையில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை