ஊரடங்கில் போடப்பட்ட தடுப்புகளால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு
காஞ்சிபுரம், கொரோனா ஊரடங்கின்போது காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக, சாலை தடுப்பு அமைக்கப்பட்டது.ஆனால், ஊரடங்கு தளர்வுக்கு பின், பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட சாலை தடுப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.குறிப்பாக, கிழக்கு ராஜ வீதியில் இருந்து, சங்குபாணி விநாயகர் கோவில் தெருவிற்கு செல்லும் சாலை நுழைவு பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது.இதனால், இச்சாலை வழியாக உலகளந்த பெருமாள், காமாட்சியம்மன், அபிராமீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களுக்கு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், சாலை வளைவு பகுதியில் வாகனத்தை திருப்புவதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சங்குபாணி விநாயகர் கோவில் தெரு நுழைவாயிலில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை தடுப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.