பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
உத்திரமேரூர்: பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை அகற்ற பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் தாலுகா, பெருநகர் கிராமத்தில் பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தை பிரம்மோத்சவம், தைப்பூ சம், மாசிமகம், சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடை பெறுவது வழக்கம். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவிலில், 14 நாள் நடக்கும் தை பிரம்மோத்சவ பெருவிழாவில், 7-ம் நாள் திருத்தேர் வீதியுலா நடப்பது சிறப்பு. இக்கோவிலில், சுற்றுவட்டார கிராமத்தினர் குழந்தை வரம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும், சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷே கம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்நிலையில், இக்கோவிலின் கோபுரம் முறையாக பராமரிப்பு இல்லாததால், அரச மரச்செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகளின் வேர்களால் கோவில் கோபுரத்தின் சிற்பங்கள் சிதைந்து, நாளடைவில் கோபுரம் முழுதும் வலுவிழக்க வாய்ப்புள்ளது. எனவே, பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரச மரச் செடிகளை அகற்ற, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.