துணை சுகாதார நிலையம் கட்ட ரூ.41.35 லட்சம் ஒதுக்கீடு
உத்திரமேரூர், உத்திரமேரூர் சுகாதார வட்டத்திற்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில், அரசு துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த துணை சுகாதார நிலையத்திற்கு நடுப்பட்டு, காரணை, அம்மையப்பநல்லுார் ஆகிய பகுதியைச் சேர்ந்தோர் தினமும் வந்து செல்கின்றனர்.இங்கு, காய்ச்சல், கர்ப்பிணியர் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், மிகவும் சேதமடைந்து இருந்தது. இதை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, தேசிய சுகாதார இயக்கம், 2024 -- 25ம் நிதியாண்டில், 15-வது நிதிக்குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ், பழைய கட்டடத்தை அகற்றி,புதிதாக அமைக்க 41.35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புதிய கட்டடம் கட்டும் பணிகள், விரைவில் துவக்க உள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.