உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டெண்டர் விட்டு இரு மாதங்களாகியும் துவங்கப்படாத பள்ளி கட்டுமான பணி

டெண்டர் விட்டு இரு மாதங்களாகியும் துவங்கப்படாத பள்ளி கட்டுமான பணி

உத்திரமேரூர்: டெண்டர் விட்டு இரண்டு மாதங்களாகியும், கம்மாளம்பூண்டி பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணி துவங்கப்படாமல் உள்ளதாக, கிராம மக்கள் தெரிவித்தனர். உத்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 374 மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, கட்டடம் ஒன்று பழுதடைந்து, மழைநேரங்களில் கூரையில் இருந்து மழைநீர் வழிந்து வந்தது. இதனால், இக்கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, இரண்டு மாதத்திற்கு முன், 1 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வகுப்பறைகள் கட்ட, பொதுப்பணித் துறையினர் நிதி ஒதுக்கி டெண்டர் விட்டனர். ஆனால், டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதங்களாகியும், இன்னமும் பள்ளி வகுப்பறை கட்டுமான பணி துவங்கப்படாமல் உள்ளது. இதனால், மாணவ -- மாணவியர் வேறொரு கட்டடத்தில் அமர வைக்கப்பட்டு, போதிய இடவசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியை விரைந்து துவக்க, பொதுப்பணித் துறையினருக்கு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, காஞ்சி புரம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சோமசுந்தர் கூறியதாவது: கம்மாளம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக வகுப்பறைகள் கட்ட, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக, பழுதடைந்த பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, இந்த மாத இறுதிக்குள் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை