உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புத்தக திருவிழாவில் அறிவியல் செயல்முறைகள் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் வரவேற்பு

புத்தக திருவிழாவில் அறிவியல் செயல்முறைகள் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் வரவேற்பு

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்ட புத்தக திருவிழா, ஜன., 31ல், கலெக்டர் வளாக மைதானத்தில் துவங்கியது. ஏராளமான புத்தக அரங்குகளில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மூன்றாம் நாளான நேற்று இரவு, சுகிசிவம், புலவர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இன்று, பர்வீன் சுல்தானா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் பேச உள்ளனர்.மாணவ - மாணவியருக்கான புத்தகங்கள், பல அரங்குகளில் அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிகிறது.அதேசமயம், அறிவியல் புத்தகங்கள் ஏராளமானவை, பல்வேறு தலைப்புகளின் கீழ் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், அறிவியல் செயல்முறை விளக்கங்களும், புத்தகங்களும், அறிவியல் காலண்டரும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.அறிவியல் தொடர்பாக, 20 வகையான செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த அரங்கின் செயல்முறை விளக்கங்களை, பலரும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.மேலும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகளும், காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.வானிலை அறிவியல், இயற்பியல் தத்துவம், அன்றாட வாழ்க்கையில் வேதியியல் போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய அறிவியல் புத்தகங்கள், இம்முறை இடம் பெற்றுள்ளன.புத்தக திருவிழாவிற்கு வரும் வாசகர்கள், சிறுகதை, நாவல், வரலாறு, சமகால அரசியல் தொடர்பான புத்தகங்களை விட, அறிவியல் புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை பார்க்க முடிகிறது.புத்தக திருவிழா, ஆண்டுதோறும் நடத்துவது வரவேற்கத்தக்கது. பொது அறிவை வளர்ப்பது தொடர்பான புத்தகங்களும், பணம் சம்பாதிப்பது தொடர்பான புத்தகங்களும், அதிகம் இடம் பெற்றுள்ளன. உளவியல் தொடர்பான புத்தகங்கள் நான் வாங்கினேன்.- டி.சுந்தர், காஞ்சிபுரம்.புத்தக திருவிழாவில் புத்தகங்கள் மட்டுமல்லாம், கலை நிகழ்ச்சிகளும் நடத்துவது நன்றாக உள்ளது. நான் போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கியுள்ளேன். போட்டித்தேர்வுக்கான புத்தகம், இங்கு அதிகம் உள்ளது.- ஏ.காலேப், காஞ்சிபுரம்.

காட்சி பொருளான மஞ்சப்பை இயந்திரம்

தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டது.இந்த இயந்திரம், பத்து ரூபாய் நாணயம் அல்லது ரூபாய் நோட்டு செலுத்தினால், மஞ்சப்பை வழங்கியது. புத்தக திருவிழா துவங்கிய முதல் நாளிலேயே, இந்த இயந்திரம் பழுதடைந்துவிட்டது.அன்றிலிருந்து காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. இதனால், புத்தக திருவிழாவிற்கு வரும் புத்தக ஆர்வலர்கள், தாங்கள் வாங்கிய புத்தகங்களை எடுத்துச்செல்ல, மஞ்சப்பை பெற முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, பழுதடைந்த மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை பழுதுநீக்கம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !