விசைத்தறி சேலைகளை பட்டு என விற்பதால் பாதிப்பு: அசல் பட்டு கைத்தறி நெசவு தொழிலுக்கும் ஆபத்து
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் விசைத்தறி சேலைகளை பட்டு சேலை எனக்கூறி, 250 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதால், அசல் கைத்தறி பட்டு சேலை நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டு சேலை வியாபாரம் குறைந்து, காஞ்சிபுரம் நெசவாளர்கள் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் நலிந்து வருகிறது.காஞ்சிபுரம் நகருக்கு வரும் வெளியூர்வாசிகளில் குறிப்பிட்ட சதவீதம் பேர், பட்டு சேலை வாங்க வருகின்றனர். வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு, லட்சக்கணக்கில் பட்டு சேலை வாங்கும் வெளியூர் மக்களால், பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.கைத்தறியில் நெய்யப்படும் நேர்த்தியான பட்டு சேலைகள் என்பதாலேயே, காஞ்சிபுரத்தை நோக்கி, தென் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா என, வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். எச்சரிக்கை
அவர்களை ஏமாற்றும் வகையிலும், காஞ்சிபுரம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், விசைத்தறியால் நெய்யப்பட்ட சேலைகள், காஞ்சிபுரத்தில் அதிகளவில் விற்கப்படுகின்றன.சாதாரண விசைத்தறி சேலைகளை, பட்டு கைத்தறி சேலைகள் என விற்பதால், காஞ்சிபுரம் அசல் பட்டு நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.விசைத்தறியால் நெய்யப்பட்ட சேலைகளை, கைத்தறி பட்டு சேலைகள் என விற்பனை செய்யக்கூடாது என, ஏற்கனவே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பலர் இன்னமும் விற்பனை செய்வதால், அசல் பட்டு சேலைகளின் விற்பனை குறைந்து, உற்பத்தியாளர்கள், நெசவாளர்களின் வாழ்க்கையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. கைத்தறி சங்கங்கள்
தனியார், பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் அசல் பட்டு சேலையை ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.ஆனால், விசைத்தறியால் நெய்யப்பட்ட பல வகையான சேலைகள், 250 கோடிக்கு மேலாக, தனியார் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படுவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். பல கோடி ரூபாய் வியாபாரம் பாதிப்படைந்து, பல கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் நலிவடைந்து கிடக்கின்றன.கோர்வை உள்ளிட்ட சில குறிப்பிட்ட பட்டு ரகங்கள் விசைத்தறியால் நெய்யக்கூடாது என, எச்சரிக்கை விடுத்தும், அவற்றை விசைத்தறியால் நெய்து விற்கின்றனர். அதிகாரிகளும் சில மாதங்கள் முன்பாக ஆய்வு நடத்தினர். ஆனால், வியாபாரிகள் அஞ்சுவதாக இல்லை.இதனால், விசைத்தறியில் நெய்த சேலைகளை விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நெசவாளர்களுக்கு குறைந்தபட்சம் 7,000 கூலி நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும், நடவடிக்கை எடுக்காத கைத்தறி துறை அதிகாரிகள் மீது கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட ஐந்து தீர்மானங்களை, சங்க செயற்குழு கூட்டத்தில், நேற்று முன்தினம் நிறைவேற்றியுள்ளனர்.விசைத்தறி சேலைகள் விலை குறைவு
காஞ்சிபுரம் பட்டு சேலைகள் 10,000 ரூபாய்க்கு குறைவாக கிடைப்பதில்லை; தரமானவையாக, கைகளால் நெய்யப்பட்டதாக இருக்கும். ஆனால், வெளியூர் விசைத்தறி சேலைகள், விலை மலிவாக கிடைக்கும். விலை குறைவு என்பதால், அந்த சேலைகளை அதிகம் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர்.மேலும், சில தனியார் கடை உரிமையாளர்கள், வெளியூர் விசைத்தறி சேலைகளை, காஞ்சிபுரம் பட்டு சேலைகள் என ஏமாற்றி விற்கின்றனர். மேலும், வாடிக்கையாளர்களின் ரசனையும் மாறிவிட்டதால், பல பிரச்னைகள் இதில் எழுகிறது.விசைத்தறியில் நெய்யப்பட்ட சேலை என்ற முத்திரையை, சேலைகளில் இடம் பெற செய்ய வேண்டும் என, நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்போதுதான், வெளியூர்வாசிகளுக்கு விசைத்தறி சேலைக்கும், கைத்தறி சேலைக்கும் வித்தியாசம் தெரியவரும்.