ஓராண்டிற்குள் சேதமான பழங்குடியினர் வீடுகள் அதிர்ச்சி! தரமற்ற கட்டுமானத்தால் 443 குடும்பம் தவிப்பு
காஞ்சிபுரம்: பழங்குடியின மக்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து இடங்களில், 20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 443 வீடுகளை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து ஓராண்டு கூட நிறைவு பெறாத நிலையில், வீடுகள் சேதமாகி வருவதால், பழங்குடியின மக்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பழங்குடியின மக்கள், ஓலை குடிசைகளில் வசித்து வந்தனர்.மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பழங்குடியின மக்கள் பெரும் சிரமம் அடைவதை தவிர்க்க, அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டி தர முடிவு செய்யப்பட்டது.அதன்படி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், 2021 -- 22ம் ஆண்டிற்கான சட்டசபை மானிய கோரிக்கையின் போது, 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கப்பட்ட, 443 பழங்குடியினர் குடும்பங்களுக்கு, தலா 4.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 443 புதிய வீடுகள் கட்டப்படும்' என, அறிவிப்பு வெளியிட்டார்.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், 443 வீடுகள் கட்ட, தலா ஒரு வீட்டுக்கு 4.60 லட்சம் ரூபாய் என கணக்கிட்டு, 20.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 2022 ஜூன் மாதம் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், அப்போதைய கலெக்டர் ஆர்த்தி தலைமையில் வழங்கப்பட்டன.உத்திரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மலையாங்குளம் கிராமத்தில், 178 வீடுகளும், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட காட்ராம்பாக்கத்தில், 31 வீடுகள் கட்டப்பட்டன.மேலும், வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில், 76 வீடுகளும், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் குண்டுகுளம் பகுதியில், 58 வீடுகளும், வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தில், 100 வீடுகள் என, ஐந்து இடங்களில், மொத்தம் 443 வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள், அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்கள் வாயிலாக கட்டி கொடுக்கப்பட்டன.வீடுகள் கட்டும்போதே தரமற்ற முறையில் கட்டுவதாக, மலையாங்குளம் ஊராட்சியில் ஆய்வு செய்த போது, அப்போதைய கலெக்டர் ஆர்த்தி, திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி ஆகியோர், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை வீடுகள் கட்டும் இடத்திலேயே கடிந்து கொண்டனர்.இதையடுத்து, அடுத்த ஓராண்டில் பணிகள் முடிக்கப்பட்டு, 2023 டிசம்பரில், முதல்வர் ஸ்டாலின், 443 வீடுகளையும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதன்பின், பயனாளிகள் வீட்டிற்குள் குடிபெயர்ந்து வசிக்க துவங்கினர். வீடுகள் திறக்கப்பட்டு ஓராண்டு கூட முழுமை பெறாத நிலையில், தரை, கான்கிரீட் தளம் உள்ளிட்ட இடங்கள் சேதமாகி வருவது, பழங்குடியின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், சமீப நாட்களில் பெய்த மழைக்கு, ஊத்துக்காட்டில் கட்டியுள்ள பல வீடுகளில் கான்கிரீட் தளத்தில் தண்ணீர் கசிந்து வருகிறது.அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், காட்ராம்பாக்கம் ஊராட்சியில் கட்டியுள்ள பழங்குடியின வீடுகளும், மழைக்காலத்தில் தண்ணீர் கசிவதாக புகார் எழுந்தது. இந்த பாதிப்புகளை சரிசெய்துவிட்டதாக, அந்த ஊராட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.இருளர் பழங்குடியின மக்கள் கூறியதாவது:ஓராண்டிலேயே எங்களது வீடுகளின் கான்கிரீட் தளத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் கசிகிறது. தரை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமாகிவிட்டது. தரை கற்கள் கொண்டு முறையாக அமைக்கப்படவில்லை.இப்போதே கூரை, தரையில் சேதமடைவதால், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த வீடுகள் இன்னும் மோசமான அளவுக்கு சேதமாகும் என, எங்களுக்கு அச்சமாக உள்ளது.சாலை, குடிநீர், மின் இணைப்பு போன்ற வசதிகள் செய்து கொடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், வீடு தரமான முறையில் கட்டவில்லை என்பது வருத்தமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இந்த வீடுகள் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் பழுதானதாக எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு புகார்கள் ஏதேனும் வந்தால்தான், ஊரக வளர்ச்சித் துறையிடம் இதுபற்றி கேட்க முடியும். பழுதான வீடுகளை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரி,காஞ்சிபுரம்
பழங்குடியின வீடுகள் கட்டியுள்ள விபரம்
தாலுகா கட்டப்பட்ட வீடுகள் வீடுகள் கட்டியுள்ள கிராமம்காஞ்சிபுரம் 158 சிங்காடிவாக்கம் மற்றும் குண்டுகுளம்வாலாஜாபாத் 76 ஊத்துக்காடுஸ்ரீபெரும்புதுார் 31 காட்ராம்பாக்கம்குன்றத்துார் 178 மலையாங்குளம்