உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் அரசு மருத்துவமனை முன் மீண்டும் கடைகள் ஆக்கிரமிப்பு

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை முன் மீண்டும் கடைகள் ஆக்கிரமிப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு மருத்துவமனை முன் இருந்த கடைகள் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். உத்திரமேரூரில் உள்ள பஜார் வீதியில் வட்டார அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டார 70 கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள், தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் நோயாளிகள் மருத்துவமனை முன் உள்ள நடைபாதையை பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக இந்த நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டட திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மருத்துவமனை முன் இருந்த சாலையோர கடைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. தற்போது, ஒரு வாரம் கடந்து அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பஜார் வீதியில் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மருத்துவமனை முன் மீண்டும் வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை அகற்றாமல், பேரூராட்சி நிர்வாகத்தினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர். எனவே, உத்திரமேரூர் அரசு மருத்துவமனை முன் அமைக்கப்பட்டுள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை