களியாம்பூண்டி சுகாதார நிலையத்தில் புது கட்டுமான பணிக்கு இடம் தேர்வு
உத்திரமேரூர்:களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 1.5 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தினமும் வந்து மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். 35 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில், புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது.தற்போது, இக்கட்டடத்தின் தளம் சேதமடைந்து வருகிறது. மழை நேரங்களில் தளத்தில் இருந்து தண்ணீர் வழிந்து சொட்டுகிறது. இதனால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தண்ணீரில் நனைந்து சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, களியாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு, அதே வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, அதற்கான பணி, விரைவில் துவங்க உள்ளதாக, உத்திரமேரூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.