கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு சிறப்பு பயிற்சி
ஸ்ரீபெரும்புதுார்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் சிறப்பு பயிற்சி பட்டறை நடந்தது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பில், இதுவரை நடந்த தேர்வுகளில் மிகவும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியரை தேர்வு செய்து, அவர்களில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வி துறை சார்பில் ஊக்குவிப்பு மற்றும் சிறப்பு பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியி யல் கல்லுாரியில், 10ம் வகுப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு சிறப்பு பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நளினி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி மற்றும் மதுரை நேதாஜி சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்று மாணவ - மாணவியரை தன்னம் பிக்கையுடன் கல்வி கற்ற ஆலோசனைகளை வழங்கினர். இதில், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் காந்தி ராஜன், மாவட்ட தொடக்கப் பள்ளி கல்வி அலுவலர் எழில், கல்லுாரி பேராசிரியர் ஷீலா மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.