சகதியான பொடி கடை தெரு ஸ்ரீபெரும்புதுாரினர் அவதி
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி காந்தி சாலையில் ஏராளமான கடை மற்றும் சிறு குறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த சாலையில் இருந்து பொடி கடை தெரு வழியே தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.காந்தி சாலை மற்றும் டி.எம்.ஏ., சாலைகளை இணைக்கும் இந்த முக்கிய சாலை வழியே, ராமானுஜர் கோவில் குளத்திற்கு செல்லும் பக்தர்கள் நாள்தோறும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இந்த நிலையில், சில தினங்களாக பெய்த மழையினால், இந்த சாலை சகதியாக மாறியுள்ளது. இதனால் இவ்வழியாக நடந்து செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுகின்றனர்.மேலும், அப்பகுதியில் உள்ள பூக்கடை மற்றும் காய்கறி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை இந்த சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றத்துடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, சகதியாக மாறியுள்ள பொடி கடை தெருவை, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.