ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு...கூடுதல் வசதி!:ரூ.24.5 கோடியில் விபத்து, அதிதீவிர சிகிச்சை வார்டு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைகளில், அதிதீவிர சிகிச்சை வார்டு மற்றும் விபத்துக்கான சிறப்பு பிரிவுகளை நவீன மருத்துவ கருவிகளுடன் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் 24.5 கோடி ரூபாய், இரு வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், செங்கல்பட்டுக்கு பரிந்துரை செய்ய வேண்டிய தேவை குறைகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு சார்பில், குன்றத்துார், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் இடங்களில் தாலுகா மருத்துவமனைகளும், காஞ்சிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையும், நோயாளிகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.தனியார் மருத்துவமனைகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இருப்பினும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை என்றால், அரசு மருத்துவமனைக்கே பெரும்பாலான நோயாளிகள் வருவது வழக்கம். அவ்வாறு விபத்து, பக்கவாதம், மாரடைப்பு என, உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள், அருகில் உள்ள தாலுகா மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவதே வழக்கம்.உதாரணமாக, ஒரகடம் அருகே நடக்கும் விபத்தில் காயமடைந்தவர், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து செங்கல்பட்டுக்கு பரிந்துரை செய்யப்படுவர். இதனால், கால விரயம் ஏற்படுவதோடு, நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.இவற்றை தடுக்க, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் வாலாஜாபாத் ஆகிய இரு தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் இரு சிறப்பு பிரிவுகளை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வருகின்றன.ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில், மத்திய அரசின் சுகாதார துறையின் கீழ், 'ஆயுஷ்மான்' திட்டத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில், 50 படுக்கை வசதிகள் கொண்ட, அதிதீவிர சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டு கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில், தற்போது 53 படுக்கை வசதிகள் உள்ளன. இதனுடன், மேலும் 50 அதிதீவிர சிகிச்சை வார்டுடன் சேர்ந்து, 103 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை மாறுகிறது. மருத்துவமனை வளாகத்திலேயே, 3 அடுக்கு மாடி கொண்ட கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.விபத்தினால் பாதிக்கப்படுவோர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சிப்பவர், தலையில் காயம் ஏற்படுவது, மாரடைப்பு என முக்கிய அவசர சிகிச்சைகளுக்கு, இந்த அதிதீவிர சிகிச்சை அளிக்கும் வார்டு கைகொடுக்கும் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் மருத்துவ அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, 'மருத்துவமனை வளாகத்திலேயே, புதிய அதிதீவிர வார்டு கட்டப்பட உள்ளது. சிடி ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்கள் கேட்டுள்ளோம். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு உடனடியாக பரிந்துரை செய்ய வேண்டிய சூழல் இனி வராது. கூடுதல் மருத்தவர்களையும் நியிமிப்பார்கள். ஆப்ரேஷன் தியேட்டருக்கான மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர், எலும்பு மருத்துவர் என, முக்கிய மருத்தவர்கள் பணியாற்றுவர்' என்றார்.அதேபோல, வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில், மாநில அரசின், தமிழக சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ், 4.5 கோடி ரூபாய் மதிப்பில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான வார்டு புதியதாக கட்டமைக்கப்பட உள்ளது. போதிய வசதிகளின்றி, அவசர சிகிச்சை அளிக்கும் பிரிவு, வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் நிலையில், 4.5 கோடி ரூபாய் மதிப்பில், சிடி ஸ்கேன், செயற்கை சுவாச கருவி, எக்ஸ்-ரே, ஸ்கேன் கருவிகள், போதிய மருத்துவர்கள், உதவியாளர்கள் வசதியுடன் செயல்பட உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியிலும், தாம்பரம் செல்லும் வழியிலும் நடுவே வாலாஜாபாத் பகுதி அமைந்துள்ளது. இதனால், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான நவீன பிரிவை, இங்கு துவங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. விபத்து, மாரடைப்பு, பக்கவாதம் என, ஆறு வகையான அவசர சிகிச்சைக்கு இங்கு வாலாஜாபாத் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியும். வாலாஜாபாத்தில் போதிய வசதியில்லாமல் இருந்ததால், விபத்தில் சிக்கிய நோயாளிகள், உடனடியாக செங்கல்பட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இனி வரும் காலங்களில், அனைத்து நோயாளிகளையும் செங்கல்பட்டுக்கு பரிந்துரை செய்ய வேண்டி அவசியம் ஏற்படாது என்கின்றனர்.இதுகுறித்து வாலாஜாபாத் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாலாஜாபாத்தில், மொத்தம் 60 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், அவசர சிகிச்சை அளிக்கும் வார்டு, 4.5 கோடி ரூபாய் மதிப்பில் முழுவதும் நவீனமயமாக்கப்பட உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் பணிகள் துவங்க உள்ளன.ஆப்பரேஷன் தியேட்டர் என அனைத்து வசதிகளும் இதில் வரும். மருத்துவ உபகரணங்கள் மட்டுமல்லாமல், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மருத்துவர்கள், ஊழியர்கள் தனியாக உயரதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.