காஞ்சியில் தகவல் கோரி தினமும் 500 மனுக்கள் 30 நாளில் பதிலளிக்க மாநில கமிஷனர் உத்தரவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள் மீதான விசாரணை, மாநில தகவல் கமிஷனர் பிரியகுமார் தலைமையில் நடந்ததுபொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள், சென்னையில் உள்ள தமிழக தகவல் கமிஷன் அலுவலகத்திற்கு செல்ல சிரமமாக உள்ள சூழ்நிலையின் காரணமாக, பல்வேறு கமிஷனர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு முகாமிட்டு அந்தந்த மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாநில தகவல் கமிஷனர் பிரியகுமார் தலைமையில், தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களின் மீதான விசாரணை நடந்தது. இந்த விசாரணையின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.இந்த விசாரணையின் போது, மாநில தகவல் கமிஷனர் கூறியதாவது:தமிழ்நாடு தகவல் கமிஷன் வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய்த் துறை சார்பில், 70 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பொது தகவல் அலுவலர்கள், மனுதாரர்கள் இந்த வழக்குகள் விசாரணையில் பங்குபெற்று அவர்களின் இரண்டாம் மேல் முறையீடு தற்போது முடித்து வைக்கப்பட்டது.மேலும், அனைத்து துறைகளிலும் தினசரி சராசரியாக, 300 - 500 மனுக்கள் தகவல் ஆணையத்திற்கு வருகின்றன. இப்புகார்கள் மீது மனுதாரர்கள் மனு வழங்கிய 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். மேலும் முதல் மேல் முறையீடு என்பது, மனு செய்த 30 நாட்களில் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.