வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி பார்ட்டி ஹால் அமைக்க நடவடிக்கை
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில் பொது மக்கள் பயன்படுத்தும் வகையிலான மினி பார்ட்டி ஹால் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20,000 பேர் வசிக்கின்றனர். வாலாஜாபாத் ரவுண்டனா சாலை எதிரே, பல ஆண்டுகளுக்கு முன் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.இது போதுமான இடம் வசதியற்றதாக இருந்ததால், தனியாருக்கு வாடகை விடப்பட்டு, தற்போது உணவுக்கூடமாக செயல்படுகிறது.இதேபோன்று 6வது வார்டு, இந்திரா நகரில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய சமுதாயக்கூடம் மிகவும் பழுதடைந்து, 10 ஆண்டுகளாகா பயன்பாடற்ற நிலையில் உள்ளது.,எனவே, வாலாஜாபாத் பேரூராட்சியில் சமுதாயக்கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், வாலாஜாபாத்தில் மக்கள் பயன்படுத்தும் வகையிலான மினி பார்ட்டி ஹால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா கூறியதாவது:வாலாஜாபாத்தில் சமுதாயக்கூடம் ஏற்படுத்த பல தரப்பினரும் வலியுத்தி வருகின்றனர். அதன்படி, சுப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்த ஏதுவாக வாலாஜாபாத் பேரூராட்சிக்கான பழைய அலுவலக கட்டடம் அமைந்துள்ள இடத்தில் மினி பார்ட்டி ஹால் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக நகர்ப்புற உள் கட்டமைப்பு மற்றும் நிதிக் கழகமான 'டுபிட்கோ' நிறுவனத்திற்கு கருத்துரு அனுப்பி வைத்து, கடனுதவி பெற்று பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,இவ்வாறு அவர் கூறினார்.