காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் நெரிசல் சிரமத்தில் மாணவ - மாணவியர், பெற்றோர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் கடும் நெரிசல் ஏற்படுவதால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். காஞ்சிபுரம் நகரில் கடந்தாண்டு காந்தி ரோடு, பூக்கடைசத்திரம் உள்ளிட் ட இடங்களில் போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்தனர். இது ஓரளவு பலன் அளித்தாலும், காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள இடங்களில் பல ஆண்டுகளாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு இதுவரை தீர்வு காண முடியவில்லை. உலகளந்த பெருமாள் கோவில் அருகே எந்த இடத்திலும் கார்களை பார்க்கிங் செய்ய வேண்டாம் என, பல்வேறு பதாகைகளை போலீசார் வைத்துள்ளனர். இருப்பினும், கோவிலை சுற்றிலும் ஏராளமான கார்கள் நிறுத்தப்படுகின்றன. சுற்றிலும் புதிதாக செயல்பட துவங்கியிருக்கும் லாட்ஜ்களில் பார்க்கிங் வசதியும் இல்லாததால், காமாட்சியம்மன் சன்னிதி தெருவில், சாலையிலேயே கார்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், கோவில் நான்கு மாட வீதியிலும் கார்கள் சென்று வந்தபடியே உள்ளன. இதனால், மேற்கு கோபுரத்தின் அருகே உள்ள இரண்டு பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேற்கு கோபுரம் அமைந்துள்ள சாலை மிக குறுகலானது என்பதால், இங்கு பள்ளி நேரத்தில் கார் உள்ளிட்ட கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என, பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர். பள்ளி துவங்கும், விடும் நேரங்களில், போலீசார் இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, கார் உள்ளிட்ட வாகனங்களை மாற்று பாதையில் திருப்பிவிட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.