உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / படாளத்தில் 25ல் கரும்பு அரவை துவக்கம் ஆட்கள் இல்லாததால் விவசாயிகள் கவலை

படாளத்தில் 25ல் கரும்பு அரவை துவக்கம் ஆட்கள் இல்லாததால் விவசாயிகள் கவலை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தணஞ்சேரி, களியப்பேட்டை, ஒரக்காட்டுப்பேட்டை, அரும்புலியூர், பினாயூர், காவிதண்டலம், திருவானைக்கோவில், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதிகளில் சாகுபடி செய்யும் கரும்புகளை, விவசாயிகள் அறுவடை செய்த பின், மதுராந்தகம் அடுத்த படாளத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு அனுப்புகின்றனர்.

சாகுபடி

இங்கு, ஆண்டுதோறும் சர்க்கரைக்கு அரவை செய்யும் மொத்த கரும்புகளில், 40 சதவீதம் சீட்டணஞ்சேரி கரும்பு மண்டல விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.இப்பகுதிகளில், கடந்த ஆண்டுகளின் போது, கரும்பு வெட்ட உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்களில் ஏராளமான ஆட்கள் இருந்தனர். கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர், தற்போது சென்னை புறநகர் பகுதிகளில், தனியார் தொழிற்சாலைகளுக்கும், கட்டுமான பணிகளுக்கும் சென்று விட்டனர்.

ரூபாய் 1,800

இந்நிலையில், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை பணிகள், வரும் 25ல் துவங்க உள்ள நிலையில், கரும்பு வெட்ட ஆட்கள் தட்டுப்பாடால், இப்பகுதிவிவசாயிகள் தவித்துவருகின்றனர். இதுகுறித்து சாத்தணஞ்சேரி கரும்பு விவசாயிகள் கூறியதாவது:கரும்பு வெட்ட உள்ளூரில் ஆட்கள் கிடைப்பதில்லை. விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் ஆட்கள் கிடைத்தாலும், 1,000 கிலோ கரும்பு வெட்ட 1,800 ரூபாய் வரை கூலி கேட்கின்றனர்.மேலும், உணவு செலவு போன்ற இதர செலவுகள் உள்ளன. இதனால், கரும்பு சாகுபடி வாயிலாக கிடைக்கும் மொத்த வருவாயில், பெருந்தொகை கரும்பு வெட்டும் கூலிக்கே செலவிட வேண்டி உள்ளது. இதனால், கரும்பு உற்பத்தி செலவுக்கு வாங்கிய கடன் உள்ளிட்ட ஏராளமான பண கடன்களை திரும்ப செலுத்த இயலாத நிலை ஏற்படுகிறது.

கூடுதல் வசூல்

எனவே, கரும்புக்கான விலை மற்றும் கரும்பு விவசாயத்திற்கான வங்கி கடனுதவி போன்ற தொகையை அரசு அறிவிப்பது போல், கரும்பு வெட்டு கூலிக்கான விலையையும் அரசு நிர்ணயித்து, அரசின் கட்டுப்பாட்டில் வெட்டுக் கூலியை வைத்திருக்க வேண்டும். மேலும், இப்பகுதிகளில் கரும்பு அறுவடை இயந்திரம் சொந்தமாக வைத்துள்ள அதன் உரிமையாளர்கள், கரும்புகளை அறுவடை செய்ய விவசாயிகளிடம் கூடுதலான தொகை வசூல் செய்யும் நிலை உள்ளது. இதனால், ஆலை நிர்வாகம் வாயிலாக கரும்பு அறுவடை இயந்திரங்களை கூடுதலாக வழங்க வேண்டும். மேலும், வெட்டுக்கூலியை சர்க்கரை ஆலை நிர்வாகம்ஏற்கும் வகையிலான செயல் திட்டம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை