தார் தொழிற்சாலை புகையால் வேண்பாக்கத்தில் பாதிப்பு
வாலாஜாபாத், வேண்பாக்கத்தில் தார் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை புகையால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், வேண்பாக்கம் கிராமத்தில், விவசாய நிலங்களை விலைக்கு பெற்ற தனியார் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் அந்நிலத்தில் தார் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்கியது. இத்தொழிற்சாலை அருகே சாலை மற்றும் சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளில் பரவும் தொழிற்சாலை புகையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, வேண்பாக்கம் மக்கள் கூறியதாவது: வேண்பாக்கத்தில் இயங்கும் தார் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை சாலை மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகளில் பரவுகிறது. இதனால், துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த புகை காற்றை சுவாசிப்பதால், பலருக்கும் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் நிலவுகின்றன. எனவே, இத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை, மக்களை பாதிக்காதவாறு அதிக உயரம் கொண்ட புகைக்கூண்டு அமைத்து கரும்புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.