உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 5 ஆண்டுகளாகியும் அகற்றப்படாத ஆக்கிரமிப்பால் வீணாகும் தடுப்பணை

5 ஆண்டுகளாகியும் அகற்றப்படாத ஆக்கிரமிப்பால் வீணாகும் தடுப்பணை

படப்பை:வரதராஜபுரம் அணைக்கட்டுதாங்கல் ஏரியும், அடையாறு கால்வாயும் இணையும் பகுதியில், 11 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டி ஐந்து ஆண்டுகளாகும் நிலையில், ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். படப்பை அருகே வரதராஜபுரம் ஊராட்சி எல்லையில் அணைக்கட்டு தாங்கல் ஏரி, 133 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. படப்பை நீர்வளத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, 1,000க்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், ஏரி இருக்கும் அடையாளமே மாறி, சமவெளி பகுதி போல் காட்சியளிக்கிறது. மேலும், இந்த ஏரியையொட்டி, ஆதனுாரில் இருந்து துவங்கி செல்லும் அடையாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் வழியில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, 30 ஏரிகளின் உபரி நீர் கலக்கிறது. இவை, முடிச்சூர், வரதராஜபுரம் வழியே கடந்து செல்கின்றன. இதனால், வடகிழக்கு பருவ மழை காலத்தில், ஆண்டுதோறும் வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. வெள்ள பாதிப்பை தடுக்க, ஆக்கிரமிப்பில் உள்ள வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரியும், அடையாறு கால்வாயும் இணையும் பகுதியில் தடுப்பணை கட்ட, பொதுப்பணி துறையினர் 2019ம் ஆண்டு திட்டமிட்டனர். இதையடுத்து, வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு வசிக்கும் மக்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மாற்று இடம் வழங்க திட்டமிடப்பட்டு, 686 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பின், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், 2020ம் ஆண்டு வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரியும், அடையாறு கால்வாயும் இணையும் பகுதியில், 11 கோடி ரூபாய் மதிப்பில், ஷட்டர்களுடன் கூடிய 12 கண் மதகு கட்டப்பட்டது. ஆனால், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், இதுவரை அகற்றப்படவில்லை. இதனால், இந்த தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. தடுப்பணை மதகின் 12 ஷட்டர்களும் திறந்தே உள்ளதால், இதன் வழியே மழை நீர் வெளியேறி வீணாகிறது. இதனால், 11 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டியும் பயனில்லை. வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, திட்டமிட்டப்படி நீர்த்தேக்கத்தை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை