எதிர் எதிரே செல்லும் வாகனங்களால் சர்வீஸ் சாலையில் காத்திருக்கும் ஆபத்து
காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு சாலையில், ஆரியபெரும்பாக்கம் சர்வீஸ் சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சென்னை - பெங்களூரு இடையே, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை செல்கிறது. இச்சாலை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகின்றன.மதுரவாயல் முதல், ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம் மற்றும் காஞ்சிபுரம் காரப்பேட்டை முதல், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம் விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் முதல், காஞ்சிபுரம் காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., துாரம் பணி நடந்து வருகிறது.இதில், ஆரியபெரும்பாக்கம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும், திருப்புட்குழி, தாமல் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.கூரம், ஆரியபெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் ஆரியபெரும்பாக்கம் மேம்பாலத்தின் கீழே கடந்து, காஞ்சிபுரம் செல்லும் போது, சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் வாகனங்கள் ஆரியபெரும்பாக்கம் சர்வீஸ் சாலையில் அதிவேகமாக கடந்து செல்கின்றனர்.இதனால், ஆரியபெரும்பாக்கம் - -காஞ்சிபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆரியபெரும்பாக்கம் சர்வீஸ் சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.