தடவாளப் பொருட்கள் இல்லாததால் பூட்டி கிடக்கும் உடற்பயிற்சி கூடம்
கூரம்:காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமம் உள்ளது. இங்கு, கால்நடை மருத்துவமனை கட்டடம் அருகே, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மேம்பாட்டு நிதியில், 10.46 லட்ச ரூபாய் செலவில், உடற்பயிற்சி கூடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.இந்த உடற்பயிற்சி கூட கட்டடத்தில், உடற்பயிற்சி செய்வதற்கு போதிய தடவாளப் பொருட்கள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்தவில்லை.இதனால், 10.46 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. கூரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெளியே சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகி உள்ளது.எனவே, கூரம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத உடற்பயிற்சிகூட கட்டடத்தை திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.