உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரைவு பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை...13.55 லட்சம்! : பெயர் சேர்க்க, நீக்க 4 நாட்கள் சிறப்பு முகாம்

வரைவு பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை...13.55 லட்சம்! : பெயர் சேர்க்க, நீக்க 4 நாட்கள் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, 13.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தங்களுக்கான பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025க்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுதும் வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் நேற்று வெளியிடப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கலைச்செல்வி வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.அடுத்ததாக, வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், சப்- - கலெக்டர் அஷரப்அலி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியினர், கலெக்டர் கலைச்செல்வியிடம், வரைவு வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விபரப்படி, 13 லட்சத்து, 55,188 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 6 லட்சத்து, 58,818 பேர் ஆண்களும், 6 லட்சத்து, 96,153 பெண்களும், 217 பேர் மூன்றாம் பாலினத்தவரும் ஆவர்.மேலும், 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட ஓட்டுச்சாவடி மையங்களை பிரிக்க, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சியினரும் பல்வேறு ஓட்டுச்சாவடிகளை பிரிக்க வேண்டும் என, கேட்டு வருகின்றனர்.அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில், இரண்டு ஓட்டுச்சாவடி மையங்களும், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தலா ஒரு ஓட்டுச்சாவடி மையம் என, மொத்தம் நான்கு ஓட்டுச்சாவடிகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 1,401ஆக உயர்ந்துள்ளது.வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிட்டபோது அரசியல் கட்சியினர், கலெக்டரிடம் கூறியதாவது :பழங்குடியின மக்களுக்கு ஏற்கனவே ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் இல்லாமல் உள்ளனர். அவர்களை வாக்காளர் பட்டியலில் முழுமையாக சேர்க்க வேண்டும்.உயிரிழந்தவர்கள் பதிவுகளை நீக்க வேண்டும். இரட்டை பதிவு உள்ளிட்ட பிரச்னைகளையும் சரி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்கைளயும் முழுமையாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

4 நாட்கள் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், ஆலந்துார் ஆகிய சட்டசபை தொகுதிகளில், 2025 ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைபவர்கள், தங்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.பெயர் சேர்க்க படிவம் - 6 பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் - 7, தொகுதி மற்றும் முகவரி மாற்றம் இருந்தால், படிவம் - 8 பூர்த்தி செய்து அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் கொடுக்கலாம்.இதற்காக, நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் நடைபெறும் முகாம்களில், உரிய ஆவணங்கள் கொடுத்து சரி செய்துக்கொள்ளலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியிட்டப்பட்ட பட்டியலில் உள்ள வாக்காளர்கள் விபரம் :

ஆலந்துார் 1,90,874 1,95,863 62 3,86,799ஸ்ரீபெரும்புதுார் 1,88,521 1,99,989 69 3,88,579உத்திரமேரூர் 1,28,905 1,38,970 52 2,67,927காஞ்சிபுரம் 1,50,518 1,61,331 34 3,11,883மொத்தம் 6,58,818 6,96,153 217 13,55,188


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ