இருளில் மூழ்கிய பழையசீவரம் மலை பஸ் நிறுத்தம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தம் உள்ளது. பழையசீவரம் மற்றும் பாலாற்றின் மறு கரையில் உள்ள திருமுக்கூடல், புல்லம்பாக்கம், வயலக்காவூர், சிறுதாமூர், சித்தாலப்பாக்கம், பழவேரி, சீத்தாவரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.இதனால், பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்தில் அதிகாலை துவங்கி, இரவு 10:00 மணி வரை பயணியர் வருகை இருந்தபடி உள்ளது.மேலும், ஏராளமான பெண் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் இப்பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் தொழிற்சாலை வாயிலாக இயங்கும் வேன் மற்றும் பேருந்துகளுக்காக காத்திருந்து கம்பெனிகளுக்கு சென்று வருகின்றனர்.இப்பேருந்து நிறுத்தத்தில் மின் வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து பயணியர் தொடர்ந்து அவதிபடுகின்றனர். சமீபத்தில் இச்சாலை விரவாக்கப் பணி நடந்தது. அதை தொடர்ந்து, உயர்கோபுர மின்விளக்கு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உயர் கோபுரம் மற்றும் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.எனினும், இதுவரை மின் இணைப்பு வழங்காமல் உள்ளது.காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்கப் பணி முழுமை பெற்றதற்கு பிறகே, மின் விளக்கு வசதிகள் மேம்படுத்தப்படும் என, கூறப்படுகிறது.இதனால், இங்குள்ள பயணியரின் இருள் பயணம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.எனவே, பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்தில், மின்விளக்கு வசதி விரைந்து ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.