| ADDED : மார் 10, 2024 12:55 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, சாலையோரம் இருந்த கட்சிக் கொடிகளை, போலீசார் அகற்றியபோது, கட்சியினர் மல்லுக்கட்டினர்.ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில், அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் வரிசையாக நடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுவின்படி இந்த கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று ஈடுபட்டனர்.இந்நிலையில் அங்கு வந்த ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த கருணாநிதி, கொடிக் கம்பங்களை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதை அறிந்த உதவி காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், சம்பவ இடத்திற்கு வந்து, கருணாநிதியுடன் பேச்சில் ஈடுபட்டார். ஆனாலும், கொடிக்கம்பத்தை அகற்ற, கருணாநிதி தொடர்ந்து எதிர்த்தார்.இதைத் தொடர்ந்து, கருணாநிதியிடம் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் விளக்கமாக எடுத்துரைத்தும் கருணாநிதி கேட்கவில்லை. இதனால், ஏ.எஸ்.பி., உதயகுமார் 'என் வேலையை செய்கிறேன். தடுக்காதீர்கள். என் மேல் தவறு இருந்தால் வழக்கு தொடருங்கள்' என்றபடியே, கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டுக்களை அகற்ற போலீசாருக்கு உத்தரவிட, சிறிது நேரத்தில் அவை அகற்றப்பட்டன.