உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ராஜாஜி மார்க்கெட் டெண்டர் பிரச்னை நீண்ட இழுபறிக்கு பின் கிடைத்தது தீர்வு

ராஜாஜி மார்க்கெட் டெண்டர் பிரச்னை நீண்ட இழுபறிக்கு பின் கிடைத்தது தீர்வு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், 100 ஆண்டுகள் பழமையான கட்டடங்களில், போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வந்தது.இதனால், புதிய ராஜாஜி மார்க்கெட் கட்டும் பணிகள், 7 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த 2022ல் துவங்கப்பட்டன. மார்க்கெட் கட்டுமானப் பணிகள் துவங்கியதால், ஓரிக்கையில் தற்காலிக மார்க்கெட் இடம் மாறியது.மார்க்கெட் கட்டடப் பணி, அடுத்த ஓராண்டில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணிகள் இழுத்தடிக்கப்பட்டு, இரு ஆண்டுகளுக்குப் பின், கடந்த ஆகஸ்ட் மாதம், முதல்வர் ஸ்டாலின் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.மார்க்கெட்டில், கான்கிரீட் தளம் கொண்ட கடைகள், தரை கடைகள், கிடங்கு என, 258 கடைகள் கட்டப்பட்டுள்ளன. மார்க்கெட் திறந்த பின், அடுத்த ஓரிரு மாதங்களில் வாடகை, 'டெண்டர்' உள்ளிட்ட பணிகள் முடிந்து, புதிய மார்க்கெட்டில் வியாபாரத்தை துவங்குவோம் என, வியாபாரிகள் பலரும் காத்திருந்தனர்.மார்க்கெட் கடைகளை டெண்டர் விடுவதில், அதிகாரிகள் காலதாமதம் செய்ததால், புதிய மார்க்கெட்டில் வியாபாரம் துவங்க முடியாமல் உள்ளது.மார்க்கெட் டெண்டர்உத்தரவாத தொகை, டிபாசிட் தொகை என, பல்வேறு கட்டணங்கள் சேர்த்து கோடிக்கணக்கான ரூபாயாக மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்ததால், கடந்த அக்டோபர் 23ம் தேதி நடந்த மார்க்கெட் டெண்டரில், மார்க்கெட் சங்கம் உட்பட யாரும் பங்கேற்கவில்லை.இதனால், முதன்முறையாக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. மார்க்கெட் சங்கம் கோரிக்கையை தொடர்ந்து, உத்திரவாத தொகையை, 1 கோடியில் இருந்து, 50 லட்சமாக மாநகராட்சி குறைத்தது.இதையடுத்து, நவம்பர்26ல் டெண்டர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போதும், நிர்வாகக் காரணங்களால் மார்க்கெட் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.மூன்றாவது முறையாக,நவ., 28ல் நடைபெறும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், மூன்றாவது முறையாக, நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால், வியாபாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, டிச., 5ம் தேதி டெண்டர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சியில், ராஜாஜி மார்க்கெட் டெண்டர் நேற்று கோரப்பட்டது. இதில், ராஜாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் மோகன் மற்றும் ஒப்பந்ததாரர் ஒருவர் என, இருவர் மட்டும் டெண்டரில் பங்கேற்றனர்.இதில், அதிகபட்ச தொகையாக, 1.71 கோடி ரூபாய் கேட்டிருந்த மார்க்கெட் சங்கத்திற்கு, ராஜாஜி மார்க்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மார்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள உணவகம், கடைகள், கிடங்கு என, 258 கடைகளுக்கு வாடகை வசூலிக்கும் உரிமையை, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் பெறுகிறது.டெண்டர் விடுவதில் பல மாதங்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, வாடகை நிர்ணயம், கடை ஒதுக்கீடு போன்ற பணிகள் முடிந்த பின், புதிய மார்க்கெட்டில் வியாபாரம் துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை