எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை 2026 தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெறும்
காஞ்சிபுரம்:அரசின் நலத்திட்ட உதவிகளால், தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும் என, காஞ்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் பேசினர். தி.மு.க., மாணவரணி சார்பில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் சி.வி.எம்., அண்ணாமலை பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தி.மு.க., மாவட்ட செயலர் சுந்தர் தலைமை வகித்தார். கழக மாணவரணி செயலர் எழிலரசன் முன்னிலை வகித்தார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசியதாவது:தமிழகத்தில், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. இதனால், அடுத்த தேர்தலிலும் தி.மு.க., ஆட்சிக்கு வருவது உறுதியாகி உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.வரும் சட்டசபை தொகுதி தேர்தலில், 200 தொகுதிகளை பிடிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களின் வாயிலாக, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:ஸ்டாலின் முதல்வரான பின், பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்து, மகளிர் உரிமை தொகை, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.இது, லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கு வழிவகுத்தது. மேலும், சட்டசபை தேர்தலிலும் வெற்றிக்கு வழிவகுக்கும். எனக்கும், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனுக்கும் தான் போட்டி.பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவர்களை படிக்க வைத்து, உயர் கல்விக்கு அனுப்பிவிடுகிறோம். அண்ணனின் துறை தான் உயர் கல்வியை தொடர மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, 50 சதவீதம் பேர் உயர்கல்வி படிக்க வேண்டும் என, முதல்வர் இலக்கு நிர்ணயம் செய்திருந்தார். நாம், இலக்கை காட்டிலும், 3 சதவீதம் கூடுதலாக இருக்கிறோம். மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.