உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.4 கோடியில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பயன்பாட்டின்றி மூடியே கிடக்கும் அவலம்

ரூ.4 கோடியில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பயன்பாட்டின்றி மூடியே கிடக்கும் அவலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 114 சிறிய அளவிலான சமுதாய கழிப்பறை வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளன. இதனால், 4 கோடி ரூபாய் செலவழித்தும் கட்டடங்கள் வீணாகி வருகின்றன என, சமூக ஆர்வலர்கள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிதோறும் மகளிர் கழிப்பறை வளாகங்கள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.

சேதம்

பெரும்பாலான ஊராட்சிகளில், மகளிர் கழிப்பறை வளாகங்கள் பயன்பாடு இன்றி, வீணாகி உள்ளன. ஒரு சில ஊராட்சிகளில், முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு, சேதம் ஏற்பட்டு இருக்கிறது.இதற்கு பதிலாக, 274 ஊராட்சிகளிலும், சிறிய சமுதாய கழிப்பறை வளாகம் கட்டிக் கொடுப்பதற்கு, ஊரக வளர்ச்சி துறை முடிவு செய்து உள்ளது.முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு, 114 சிறிய சமுதாய கழிப்பறை வளாகங்கள் கட்டுவதற்கு, முதற்கட்டமாக, 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.இதில், 2.10 லட்சம் ரூபாய் துாய்மை பாரத இயக்க நிதியிலும், 1.40 லட்சம் ரூபாய், 15வது நிதிக் குழு மானிய நிதியிலும் செலவழிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறை அறிவுரை வழங்கி இருந்தது.இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றால், அடுத்த நிதி ஆண்டில், எஞ்சியிருக்கும், 143 சிறிய சமுதாய கழிப்பறை வளாகங்களை படிப்படியாக கட்டி கொடுப்பதற்கு திட்டமிட்டிருந்தது.இதன் வாயிலாக, திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற்றுவதோடு, கிராம மக்களின் சுகாதாரமும் பேணி காக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்திருந்தனர்.

சிக்கல்

இருப்பினும், சிறிய அளவிலான சமுதாய கழிப்பறை வளாகங்களுக்கு வரவேற்பு இல்லாததால், 2024- - 25ம் நிதி ஆண்டு 45 சிறிய அளவிலான கழிப்பறை வளாக கட்டடங்கள் கட்டிக் கொடுக்க திட்டமிட்டுள்ளது.இதில், 2023- - 24ம் நிதி ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட சிறிய அளவிலான கழிப்பறை வளாகங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என, கிராமத்தினர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.இதனால், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக மாற்றுவதில் பல்வேறு ஊராட்சிளில் சிக்கல் எழுந்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2023- - 24ம் நிதி ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட சிறிய அளவிலான சமுதாய கழிப்பறை வளாகத்தை பயன்படுத்துவோர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவர்களிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.கடந்த, 2024- - 25ம் நிதி ஆண்டில், புதிதாக கட்டிய சமுதாய கழிப்பறை வளாகம் ஏதேனும் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும். அதையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை வளாகங்கள்

ஒன்றியங்கள் எண்ணிக்கைகாஞ்சிபுரம் 17உத்திரமேரூர் 34வாலாஜாபாத் 31ஸ்ரீபெரும்புதுார் 18குன்றத்துார் 14மொத்தம் 114

கழிப்பறை கட்டுவதிலும் சொதப்பல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 2022 - -23ம் நிதி ஆண்டு முதல், 2024 - -25ம் நிதி ஆண்டு வரையில், 11,425 கழிப்பறைகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், 8,724 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதம், 2,701 கழிப்பறைகள் நிலுவையில் இருக்கிறது என, புள்ளி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !