காஞ்சி வரதர் கோவிலில் தொடுதிரை தகவல் பெட்டி திறப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தொடுதிரை தகவல் பெட்டியை,கலெக்டர் கலைச்செல்வி நேற்று திறந்து வைத்தார். ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள முக்கியமான 10 கோவில்களில் தொடுதிரை வசதியுடன்கூடிய தகவல் பெட்டி அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட 10 கோவில்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 3.64 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் நிதியிலிருந்து தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று திறந்து வைத்தார். கோவில் தல வரலாறு, சிறப்பம்சங்கள், சன்னிதிகள் மற்றும் இதர முழு விபரங்களையும் தொடுதிரையின் வாயிலாக எளிதில் அறிய முடியும். மேலும் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள மற்ற கோவில்களின் முகவரி மற்றும் திறக்கும் நேரம் மற்றும் நடை சாற்றும் நேரம் உள்ளிட்ட அம்சங்களை கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய எளிதாக இருக்கும். இந்நிகழ்ச்சியில், கோவில் உதவி கமிஷனர் ராஜலட்சுமி, தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.