நோயாளிகளிடம் மனிதாபிமானத்துடன் அக்கறை செலுத்துங்கள்: சுதா சேஷய்யன்
காஞ்சிபுரம்: 'நோயாளிகளிடம் மனிதாபிமானத்துடன் அக்கறை செலுத்துங்கள்' என, செவிலியர் வகுப்பறை துவக்க விழாவில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பேசினார்.ஸ்ரீசங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரம் அடுத்த நல்லுாரில், 53 கோடி ரூபாய் செலவில், விடுதி வசதியுடன்கூடிய சங்கரா செவிலியர் மகளிர் கல்லுாரி கட்டப்பட்டுள்ளது.இந்த கல்லுாரி திறப்பு விழா கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. செவிலியர் கல்லுாரி மாணவியருக்கு புதிய வகுப்பறை துவக்க விழா நேற்று நடந்தது.இந்த விழாவிற்கு, நிர்வாக அறங்காவலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், ஜெயகோபால் கரோடியோ இந்து வித்யாலயா பள்ளி முதுகலை ஆசிரியர் கார்த்திக் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கரா செவிலியர் கல்லுாரி முதல்வர் ராதிகா வரவேற்றார்.தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பேசியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து வசதிகளுடன்கூடிய அதிநவீன வசதியுடன் செவிலியர் கல்லுாரியாக இந்த கல்லுாரி திகழ்ந்து வருகிறது. இங்கு, வகுப்பறைகள் நல்ல காற்றோட்டமாக உள்ளன.ஒழுக்கம், கற்றல் ஆகிய பல்வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. செவிலியர்களாகிய நீங்கள், நோயாளிகளிடம் நல்ல மனிதாபிமானம், அக்கறையுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.