உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அடிப்படை வசதிக்கு காத்திருக்கும் பழங்குடியின மக்கள் குடியிருப்பு

அடிப்படை வசதிக்கு காத்திருக்கும் பழங்குடியின மக்கள் குடியிருப்பு

தண்டலம்:கள்ளிப்பட்டில் பழங்குடியின மக்களுக்காக, ஆறு மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளில் மின் இணைப்பு, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் ஊராட்சியில், கள்ளிப்பட்டு கிராமத்தில் பிரதமர் ஜன்மன் திட்டத்தில், 28 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கோவிந்தவாடி, புதுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, வீடுகள் இல்லாத பழங் குடியின மக்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட உள்ளன. ஆறு மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டும், இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு, சாலை, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் மேம்படுத்தவில்லை. இதனால், புதிய வீடுகள் கிடைத்தும் பழங்குடியின மக்கள் இடம் பெயர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, கள்ளிப்பட்டு பழங்குடியின மக்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு மின் விளக்கு திட்டத்தில், மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க உள்ளோம். மேலும், மின் கம்பங்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் பெற்ற பிறகு, மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி