காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள இரு கடைகளுக்கு சீல்
காஞ்சிபுரம்:ஆக்கிரமிப்பில் இருந்த, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு கடைகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இரு கடைகள், உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதியில் உள்ளது. இரு கடைகளும், 38 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததாக ஹிந்து சமய அறநிலையத் துறை தெரிவித்தனர்.இடத்தை மீட்பதற்காக ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடையை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் கடையை காலி செய்யவில்லை.இந்நிலையில், காஞ்சிபுரம் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி, காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில் செயல் அலுவலர்கள், சரக ஆய்வர்கள், சிவ காஞ்சி போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில், கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன.தொடர்ந்து ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக ஆய்வர் அலமேலு, இரு கடைகளுக்கும் சீல் வைத்தார். தொடர்ந்து இரு கடைகளும் ஏகாம்பரநாதர் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.