உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீருடன் கழிவுநீர் கலப்பை கண்டறிய முடியாமல்... திணறல்:   குடிக்காதீங்க... என மக்களிடம் கெஞ்சும் மாநகராட்சி

குடிநீருடன் கழிவுநீர் கலப்பை கண்டறிய முடியாமல்... திணறல்:   குடிக்காதீங்க... என மக்களிடம் கெஞ்சும் மாநகராட்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஆறு வார்டுகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், பொதுமக்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை தொடர்கிறது. கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறிய முடியாத மாநகராட்சி அதிகாரிகள், 'வீட்டு குழாய்களில் வரும் குடிநீரை குடிக்காதீங்க' என, கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி யில், 50,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இதில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளது. தினமும், 35 மில்லியன் கன அடி தண்ணீர் மாநகராட்சிக்கு தேவைப்படும் சூழலில், 23 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே கிடைப்பதால், வீடுகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தடுக்கும் முயற்சி அவ்வாறு வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் மாசடைந்து, கழிவுநீர் கலந்து வரும் பிரச்னை பல்வேறு இடங்களில் ஏற்படுவதால், அவற்றை அருந்தும் மக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில், தற்போது 6, 16, 23, 30, 33, 35 ஆகிய ஆறு வார்டுகளிலும், குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் பிரச்னை தொடர்கிறது. ஆறாவது வார்டில், பவள வண்ணர் தெருவிலும், 16வது வார்டில் டி.கே.நம்பி தெருவிலும், 23வது வார்டில் வரதராஜ புரம் பின்தெருவிலும், 33வது வார்டில் பாவாப்பேட்டை தெருவிலும், 35வது வார்டில் ஆலடி தோப்பு பகுதியிலும் கழிவுநீர் கலக்கும் பிரச்னை தொடர்கிறது. மாநகராட்சி கூட்டம் நடக்கும் போதெல்லாம், கவுன்சிலர்கள் பலர் தங்கள் வார்டில் கழிவுநீர் கலப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். அதுபோல், கடந்த 6ம் தேதி நடந்த கூட்டத்திலும் கவுன்சிலர்கள் பலர் கழிவுநீர் கலக்கும் பிரச்னையை பேசினர். ஆலடி தோப்பு, பாவாப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு, இரண்டு மாதமாகியும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என, சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளை கண்டறிந்து, தடுக்கும் முயற்சியில் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கழிவுநீர் கலக்கும் சில இடங்களை கண்டறிய முடியாமல் திணறுகின்றனர். பிரச்னைக்கு தீர்வு கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்துவதால், பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. குடிநீர் குழாய்களை சரிபார்க்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் குழாய் குடிநீரை தற்காலிக மாக அருந்த வேண்டாம் என, அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இருப்பினும், மாநகராட்சி சப்ளை செய்யும் குடிநீரை அருந்த நகர் மக்கள் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனாலேயே, பலரும் தங்கள் வீடுகளில் போர்வெல் மூலம் கிடைக்கும் தண்ணீரை குடிக்கின்றனர். நகர் முழுதும் பல இடங்களில் நீடிக்கும் குடிநீர் - கழிவுநீர் கலப்பு பிரச்னையை, மாநகராட்சி நிர்வாகம் தீர்க்க முடியாமல் திணறி வருகிறது. இதுகுறித்து, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறிய தாவது: குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் இடங்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறிய சில நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பல இடங் களில் கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து தடுத்து உள்ளோம். சில இடங்களில் கழிவுநீர் கலக்கும் பகுதியை கண்டறிய முடிய வில்லை; தொடர்ந்து முயற்சிக்கிறோம். கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரை அருந்த வேண்டாம் என, வீடுதோறும் தெரிவித்து வருகிறோம். விரைவில், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ