பராமரிப்பில்லாத நுாற்றாண்டு: பூங்கா சீரமைக்க நகர மக்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் பராமரிப்பு இல்லாததால், சீரழியும், அண்ணா நுாற்றாண்டு பூங்காவை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகர மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், 2011ம் ஆண்டு அண்ணா நுாற்றாண்டு விழாவையொட்டி 2.50 கோடி ரூபாய் செலவில், புதிதாக பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்காவில், அழகிய பூச்செடிகள், பச்சைப்பசேல் புல்தரை, நடைபயிற்சி மேற்கொள்ள டைல்ஸ் பதித்த நடைபாதை, சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீரூற்று, கழிப்பறை, ஓய்வு மண்டபம், அமரும் இருக்கை என, பல்வேறு வசதி ஏற்படுத்தப்பட்டன. பூங்கா அமைந்துள்ள பிள்ளையார்பாளையம் பகுதி மக்கள் மட்டுமின்றி, காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள், காலை மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் சென்று பொழுதுபோக்கும் இடமாக பூங்கா இருந்து வருகிறது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்கள், சிறுவர்களுக்கான சீசா விளையாட்டு உபகரணம் உடைந்த நிலையில் உள்ளது. மக்கள் அமரும் இருக்கையில், கிரானைட் கற்களும், உயர்கோபுர மின்விளக்குகளில் உள்ள பல்புகளும் மாயமாகியுள்ளன. இதனால், இரவு நேரத்தில் பூங்காவில் போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளது. செயற்கை நீரூற்றில் தேங்கியுள்ள மழைநீர் பாசி படர்ந்த நிலையில் பூச்சிகள் உலாவும் நிலையில் உள்ளது. இதனால், பூங்காவை மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பராமரிப்பின்றி சீரழியும் அண்ணா நுாற்றாண்டு பூங்காவை முழுமையாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகர மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.