உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குப்பை கழிவால் மாசடையும் பாலாற்று படுகை ஆற்றில் விடும் கழிவுநீரை தடுக்க வலியுறுத்தல்

குப்பை கழிவால் மாசடையும் பாலாற்று படுகை ஆற்றில் விடும் கழிவுநீரை தடுக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் உள்ளது. வாலாஜாபாத் பாலாற்றங்கரையொட்டி, உணவகம், இறைச்சிக்கடை மற்றும் காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைத்து பலரும் வியாபாரம் செய்து வருகின்றனர்.இதில், சில கடைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்தும், வெளியேற்றப்படும் குப்பை கழிவை சமீப காலமாக வாலாஜாபாத்தையொட்டி உள்ள பாலாற்று படுகையில் கொட்டும் நிலை தொடர்கிறது.குறிப்பாக வாலாஜாபாத் - அவளூர் பாலாற்று குறுக்கே உள்ள தரைபாலத்தின் சாலையையொட்டி, இரு புறங்களிலும் ஏராளமான குப்பை கழிவை பல தரப்பினரும் கொட்டி செல்கின்றனர்.மேலும், அப்பகுதி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மதுபிரியர்கள் பலர், பாலாற்று படுகையில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.இதனால், வாலாஜாபாத் பாலாறு படுகையில் பிளாஸ்டிக் கழிவு, அதிக அளவில் தேக்கமாகி வருகின்றன.

கழிவுநீர் நீர்

இதேபோல, வாலாஜாபாத் ராஜவீதி சாலையில் உள்ள சில வீடுகள் மற்றும் பல்வேறு கடைகளில் இருந்தும் வெளியேற்றுகின்ற கழிவுநீரை முறையாக தொட்டி வாயிலாக தேக்கி பராமரிப்பதில்லை.மாறாக, வீடு மற்றும் கடைகளின் பின்புறம் உள்ள பாலாற்று படுகையில் கழிவுநீரை விடுவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர்.இதனால், பாலாற்றில் மண் வளம் பாதிப்பதோடு நீர் மாசுபடுகிறது.எனவே, வாலாஜாபாத் பாலாற்றில் குப்பை கழிவு கொட்டாமல் தடுக்கவும், பாலாற்றங்கரையொட்டி உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து கழிவுநீரை பாலாற்றில் விடாதவாறு பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை