மேல்பொடவூர் ஏரியை துார்வார வலியுறுத்தல்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேல்பொடவூர் கிராமம். இக்கிராமத்தில், 110 ஏக்கர் பரப்பிலான பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலான ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த பல ஆண்டுகளாக துார்வாராமல், அவ்வப்போது மதகு பழுது பார்த்தல் மற்றும் உபரி நீர் வெளியேறும் கலங்கல் பகுதியை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன.இதனால், ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் துார்ந்து மேடாக உள்ளன. ஏரி துார்ந்ததால், பருவ மழைக்காலத்தில் போதுமான தண்ணீர் சேகரமாகாமல் விரைவாக நிரம்புகிறது. அதேபோன்று கோடைக்காலத்தில் விரைவாக வறண்டு போகிறது.இதனால், அப்பகுதி விவசாயிகள், ஏரி பாசனத்தை நம்பி சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, மேல்பொடவூர் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியை துார்வாரி, ஏரிக்கான நீர் வரத்து கால்வாய்களை பராமரிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.