போக்குவரத்துக்கு இடையூறு முட்செடிகள் அகற்ற வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒ.பி.குளம் தெரு வழியாக, பல்லவர்மேடு, பிள்ளையார்பாளையம், புத்தேரி தெரு உள்ளிட்ட பகுதிக்கு பலர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், பல்லவர்மேடு, புதுப்பாளையம் மும்முனை சந்திப்பு சாலை வளைவில், சாலையோரம் சீமைகருவேல முட்செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன.இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் போது, சீமை கருவேல மரத்தின் கூர்மையான முட்செடிகள் கண், முகம் உள்ளிட்ட பாகங்களை பதம் பார்த்துவிடும் சூழல் உள்ளது.எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக, ஓ.பி., குளம் சாலையோரம் படர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.