ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித்தர வைப்பூர் மக்கள் கோரிக்கை
ஸ்ரீபெரும்புதுார்:வைப்பூர் கிராமத்தில், ஊராட்சி அலுவலக கட்டடத்தில், போதிய இடவசதியின்றி செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்கு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைப்பூர் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில், ரேஷன் கடைக்கென தனி கட்டடம் இல்லாததால், ஊராட்சி அலுவலகத்தின் அருகேயுள்ள சத்துணவு அறை கட்டடத்தில், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அது பழைய கட்டடம் என்பதால், மழைக்காலங்களில் மழைநீர் உட்புகுந்து, அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வீணாகின. இதையடுத்து, ஊராட்சி அலுவலகத்தில் உள்ள சிறிய அறைக்கு ரேஷன் கடை மாற்றப்பட்டது. போதிய இடவசதி இன்றி, நான்கு மாதங்களுக்கு மேலாக, சிறிய அறையில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில், ரேஷன் பொருட்களை கணிசமாக சேமித்து வைக்க முடியவில்லை. அதனால், ரேஷன் கார்டுதாரர்களுக்கு சரியான முறையில் பொருட்களை வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மின் இணைப்பு இல்லாத அந்த அறையில், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை எடை போட முடியாமல் விற்பனையாளர்கள் சிரமப்படுகின்றனர். இதனால், ரேஷன் கடை ஊழியர்கள் பக்கத்தில் உள்ள கட்டடத்தில் இருந்து மின்சாரம் பெற்று, பில் மற்றும் எடை போடுகின்றனர். கார்டுதாரர்களும் ரேஷன் பொருட்கள் வாங்க, நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, வைப்பூர் கிராமத்தில் ரேஷன் கடைக்கென புதிய கட்டடம் கட்ட, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.