குரங்குகள் ஆதிக்கத்தால் திணறும் அமராவதிபட்டணம் கிராம மக்கள்
உத்திரமேரூர்: குரங்குகள் தொல்லையால் திணறி வரும் அமராவதிபட்டணம் மக்கள், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், அமராவதிபட்டணத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கூட தெரு, மாரியம்மன் கோவில் தெருக்களில், குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகின்றன. இங்குள்ள, வீடுகளில் குரங்குகள் புகுந்து, உணவுப் பொருட்களை துாக்கிச் செல்கின்றன. பழ மரங்களை சேதப்படுத்தியும், தேங்காய் மரத்தில் உள்ள இளநீர் பிஞ்சுகளை அறுத்தும் செல்கின்றன. மேலும், தெருக்களில் நடந்து செல்லும் சிறுவர்கள், முதியோர் ஆகியோரை குரங்குகள் அச்சுறுத்தி, அவர்களிடமிருந்து பொருட்களை பிடுங்கி செல்கின்றன. எனவே, அமராவதிபட்டணத்தில் குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.