சாலவாக்கத்தில் ரூ.13 கோடியில் தொழிற்பயிற்சி நிலையம்
உத்திரமேரூர்:சாலவாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 13 கோடி ரூபாயில் கட்டடம் கட்ட, பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழக பட்ஜெட் 2025 கூட்டத்தொடரின்போது சாலவாக்கத்தில் ஐ.டி.ஐ., அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, சாலவாக்கத்தில் கட்டடம் கட்டப்படும் வரை வாடகை கட்டடத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக, சாலவாக்கம் அடுத்த, ஆலப்பாக்கம் பகுதியில் வாடகை கட்டடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டடம் கட்ட, சாலவாக்கம் ஊராட்சி நிர்வாகம் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கியது. தற்போது, சாலவாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடம் கட்டுவதற்கு, பொதுப் பணித் துறையினரால் 13 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சோமசுந்தர் கூறியதாவது: சாலவாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 1,600 ச.மீ., பரப்பளவில் கட்டப்பட உள்ளது. அதற்காக, 13 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த வுடன் கட்டுமான பணிகள் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.