தொழிற்பயிற்சி நிலையம் புத்தேரியில் துவக்கம்
காஞ்சிபுரம், ஆக. 26-- புத்தேரி கிராமத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று துவக்கியதை தொடர்ந்து, 33 மாணவ - மாணவியருக்கு சேர்க்கை ஆணைகளை அமைச்சர் காந்தி வழங்கினார். தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க ஏதுவாக 2025- - 26ம் நிதியாண்டில் புதிதாக, ஏழு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, தொழிற்பயிற்சி நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று திறந்து வைத்தார். காஞ்சிபுரம் அருகே புத்தேரி கிராமத்தில் திறக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் காந்தி பங்கேற்று, 33 மாணவ - மாணவியர் நடப்பு கல்வியாண்டில் சேர்வதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார். இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், ஒயர்மேன் உள்ளிட்ட ஆறு பாட பிரிவுகள் இங்கு துவக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச் செல்வி, தி.மு.க., - எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., மேயர் மகாலட்சுமி, தி.மு.க., ஒன்றியக் குழு தலைவர் மலர்க்கொடி, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் காயத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.