ரயில்வே சாலையில் போலீசார் மிஸ்சிங் நெரிசலை சீரமைத்த தன்னார்வலர்கள்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தலைமை அஞ்சலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், உழவர் சந்தை, சினிமா தியேட்டர் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.பழைய ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஜவுளிக்கடைகள் அதிகம் நிறைந்த காந்தி சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.விடுமுறை தினமான நேற்று, பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க, இச்சாலையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது.இந்நிலையில், நேற்று மதியம் 1:30 மணிக்கு, ரயில்வே சாலையுடன், பி.எஸ்.கே., தெரு, திருசக்கரபுரம் தெரு இணையும் நான்கு முனை சந்திப்பு அருகில், வாகன நெரிசல் ஏற்பட்டது.அப்பகுதியில் போலீசார் இல்லாததால், வாகன ஓட்டிகள் பலரும் போக்குவரத்து விதியை மதிக்காமல், நான்கு பக்க சாலையிலும், விதியை மீறி சென்றதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நெரிசலில் சிக்கிய சைக்கிள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஊர்ந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், வாகனங்கள் மருத்துவமனை சாலை வரை ஸ்தம்பித்து நின்றன. நெரிசலில், ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் சிக்கியது.இதையடுத்து, நெரிசலில் சிக்கிய தன்னார்வலர்கள் இருவர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், 10 நிமிடங்களுக்குப் பின், அனைத்து வாகனங்களும் நெரிசலின்றி சென்றன.பண்டிகை நாட்களில் முக்கிய சாலை சந்திப்புகளில், வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.