காஞ்சியில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி பணி தீவிரம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், ஐந்து ஒன்றியங்களில், 11 மாவட்ட கவுன்சிலர்கள்; 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 273 ஊராட்சி தலைவர்கள்; 1,938 வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.பதவியேற்ற மக்கள் பிரதிநிதிகளில் சிலர், வயது மூப்பு, உடல் நிலை சரியில்லாத காரணம், கொலை போன்ற காரணங்களால் இறந்துள்ளனர். சிலர், பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.அவ்வாறு காலியான மக்கள் பிரதிநிதிகளின் பதவியிடங்களுக்கு, ஆறு மாதங்களில் தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், தேர்தல் நடத்தாமல், ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் ராஜினாமா செய்தனர். சிலர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தனர். ஜாதி சான்று விவகாரத்தில் தகுதி நீக்கமும் செய்யப்பட்டனர்.இதுபோன்று, பல்வேறு காரணங்களால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 பதவியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பதவியிடங்களுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என கிராமத்தினர் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுதும், மே மாதம் உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.மாநில தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர்.இந்நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் ஓட்டுச்சாவடி தயார் செய்ய ஏற்கனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியிருந்தது.இந்நிலையில், வாக்காளர் பட்டியலையும் தயாராக வைத்திருக்க தெரிவித்துள்ளது. அதன்படி, இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில், வாக்காளர் பட்டியல் தயார் செய்து வைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அதைத் தொடர்ந்து, சில நாட்களில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளன.