உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 25 ஆண்டுகள் பணியாற்றியும் பணிக்கொடை கிடைக்கலை குடிநீர் பணியாளர்கள் குற்றச்சாட்டு

25 ஆண்டுகள் பணியாற்றியும் பணிக்கொடை கிடைக்கலை குடிநீர் பணியாளர்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற குடிநீர் பணியாளர்கள் மற்றும் சுடுகாடு பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்காமல், மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடிப்பதாக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஓய்வு பெற்ற ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில், குடிநீர் பணியாளர்கள் மற்றும் சுடுகாடு காவலர்களாக பணியாற்றி ஓய்வுபெற்றோம். ஆனால், தற்போது வரை பணிக்கொடை கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக, சென்னை தொழிலாளர் துணை கமிஷனரிடம் மனு அளித்தோம்.அவரின் உத்தரவுப்படி, கோதண்டன், சம்பத், பாஸ்கரன், இளங்கோவன், ராஜி, அன்புமணி ஆகிய ஆறு குடிநீர் பணியாளர்கள், குப்பன் என்கிற சுடுகாடு பணியாளர் ஆகிய ஏழு பேருக்கு, ஓய்வுபெற்ற பின் வழங்க வேண்டிய பணிக்கொடை வழங்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது.நாங்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு பலமுறை மனு அளித்தும், எவ்வித அறிவிப்பும் வரவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்து, ஏழு பேருக்கும் பணிக்கொடை வழங்க ஆணை பிறப்பித்தும், எந்தவித பதிலும் இல்லை.நாங்கள், 25 ஆண்டுகள் குறைந்த ஊதியத்தில் பணி செய்தும், எங்களுக்கு எந்தவித பணிக்கொடையும் கிடைக்கவில்லை. ஓய்வூதியமும் கிடைக்கவில்லை. ஓய்வுபெற்ற பின் வழங்க வேண்டிய பணிக்கொடையை எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ