உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெசவு கூலி வங்கியில் வரவு வைப்பதால் எதிர்ப்பு கைத்தறி துறை அலுவலகத்தில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெசவு கூலி வங்கியில் வரவு வைப்பதால் எதிர்ப்பு கைத்தறி துறை அலுவலகத்தில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கைத்தறி துறையின் கீழ் இயங்கும் கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில், 4,000க்கும் மேற்பட்ட நெவசாளர்கள் பட்டு சேலைகளை நெய்து கொடுத்து, அதற்கான கூலி பெற்று வருகின்றனர். இவர்களுக்கான நெசவு கூலி, தற்போது வரையில், சங்க அலுவலகத்தில் ரொக்கமாக கொடுக்கப்பட்டு வந்தது.ஆனால், நெசவாளர்களுக்கு நெசவு கூலியை வங்கியில் வரவு வைக்க கைத்தறி துறை அறிவுறுத்தியுள்ளது. இது சம்பந்தமாக, கைத்தறி துறை துணை இயக்குனர் மணிமுத்து, அனைத்து சங்கங்களுக்கும், நெசவு கூலி பற்றிய அறிவிப்பு கடிதங்களை அனுப்பியுள்ளார்.நெசவு கூலியை நெசவாளர்களுக்கு வங்கியில் செலுத்த உள்ளதால், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகலை சங்க அலுவலகத்தில் ஒப்படைக்க நெசவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதை அறிந்த நெசவாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். பல ஆண்டுகளாகவே பட்டு சேலை நெய்த கூலியை, ரொக்கமாக பெற்று வந்த நெசவாளர்கள், வங்கிக்கு சென்று தங்களது கூலியை பெறுவதில் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், காமாட்சிம்மன் கைத்தறி சங்க நெசவாளர்கள் பலரும், தங்களது சங்க கட்டடம் முன், நேற்று திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தி முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து, கைத்தறி துறையின் துணை இயக்குனர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.நெய்து முடித்த பட்டு சேலையை சங்கங்களில் ஒப்படைத்துவிட்டு, கூலி பெற்றுக்கொண்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதை நெசவாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நடைமுறையை மாற்றுவதால், நெசவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கடந்த 2011 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில், நெசவு கூலியை வங்கி வாயிலாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போதும், நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், தற்போது வரை ரொக்கமாகவே கூலி கொடுக்கப்பட்டு வந்துள்ளது.தற்போது, மீண்டும் வங்கியில் கூலியை செலுத்த அதிகாரிகள் முயற்சி செய்வதால், நெசவாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அலைச்சல் இன்றி சங்க அலுவலகத்தில் இருந்தே தங்களது கூலியை பெற்றுக்கொள்ள நெசவாளர்கள் விரும்புகின்றனர்.அந்த நடைமுறையை தொடர வேண்டும் என, கைத்தறி துறை இயக்குனருக்கு, காஞ்சிபுரம் நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி