வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் நீர்வரத்து இல்லாத சாத்தணஞ்சேரி ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது எப்போது?
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 110 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், சாத்தணஞ்சேரி மற்றும் சீட்டணஞ்சேரி கிராமங்களில் உள்ள 200 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த 2020- - 21ம் ஆண்டு, இந்த ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ், 68.70 லட்சம் ரூபாய் செலவில், கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுகள் சீரமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.எனினும், ஏரி தூர்வாருதல் மற்றும் ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்கள் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளது. இதனால், ஆண்டுதோறும் பருவமழைக்கு ஏரியில் குறைவான அளவு தண்ணீரே சேகரமாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது,சாத்தணஞ்சேரி ஏரி கடந்த பல ஆண்டுகளாக நிரம்பாத நிலை இருந்து வருகிறது. சாத்தணஞ்சேரி ஏரிக்கு, பாலாற்றில் இருந்து பினாயூர் வழியாக செல்லும் நீர்வரத்து கால்வாய் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த கால்வாய் தூர்ந்து, ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.மேலும், இந்த ஏரிக்கான நீர்வரத்து கால்வாய் துவங்கும் பாலாற்று பகுதி மிகவும் பள்ளமாக உள்ளது. இதனால், மழைக்காலங்களில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், நீர்வரத்து கால்வாய் வாயிலாக ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. எனவே, ஏரிக்கான நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, பாலாற்று படுகையில் மண்மேடு அமைத்து, தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சாத்தணஞ்சேரி ஏரிக்கான நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக வருவாய்த்துறையிடம், நீர்வளத் துறை சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு முறையாக நடவடிக்கை எடுக்கப்படும்.நீர்வளத்துறை அதிகாரி,காஞ்சிபுரம்.