காஞ்சி அல்லாபாத் ஏரி படுமோசம் துார்வாரி சீரமைப்பது எப்போது?
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடில் இருந்து சின்ன காஞ்சிபுரம் சி.எஸ்., செட்டி தெருவிற்குசெல்லும் வழியில் உள்ளஅல்லாபாத் ஏரி, 100 ஏக்கர்பரப்பளவில் அமைந்துள்ளது.மாநகராட்சி எல்லைக்குள் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் திருக்காலிமேடு, திருவீதிபள்ளம், நத்தப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் விவசாயம் செய்து வந்தனர்.மேலும், ஏரியை சுற்றியுள்ள திருக்காலிமேடு, நேதாஜி நகர், வரதராஜபுரம் தெரு, திருவள்ளுவர் தெரு, கே.எம்.வி., நகர், திருவீதிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நிலத்தடி நீராதாரமாக விளங்கிவருகிறது.இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரிக்கு மழைநீர் வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளால் துார்ந்துள்ளது. ஏரிக்கரையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும், கழிவுநீரும் கலந்ததால், ஏரி நீர் மாசடைந்துள்ளது.மேலும், ஏரி முழுதும் கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால், ஏரி நீர்ப்பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்துள்ளது. ஆண்டுதோறும் பருவமழையின்போது, பலத்த மழை பெய்தால் கூட, ஏரி முழுமையாக நிரம்புவதில்லை.இதனால், ஏரியை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே, அல்லாபாத் ஏரியை முழுமையாக துார்வாரி சீரமைப்பதோடு, கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஏரியில் படகு குழாம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள அல்லாபாத் ஏரியை முழுமையாக துார்வாரி, ஏரிக்கரையில் பொதுழுபோக்கு பூங்கா அமைத்தால், சுற்றியுள்ள பகுதியினர் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும்.ஏரியில் படகு குழாம் அமைத்து, அதில் பல பொழுதுபோக்கு விளையாட்டு சாதனங்களை அமைத்தால், காஞ்சிபுரம்பகுதிவாசிகளுக்கு பொழுதுபோக்கும் இடமாக அமைவதோடு, மாநகராட்சிக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். மேலும், பலருக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.