கோனேரிக்குப்பத்தில் தொடரும் நெரிசல் சுரங்கப்பாதை அமைப்பது எப்போது?
கோனேரிகுப்பம்:சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஏனாத்துாரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் புறவழிச்சாலை சாலை 5.60 கி.மீ., நீளமுடையது. இந்த சாலையை ஒட்டியுள்ள பகுதியில், ஏனாத்துார், கட்டவாக்கம், கோவிலாத்தம்மன் குளம், கோனேரிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.சென்னையில் இருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வழியாக, காஞ்சிபுரம் செல்லும் கார், வேன், இருசக்கரம், தனியார் கம்பெனி மற்றும் கல்லுாரி பேருநது உள்ளிட்ட வாகனங்கள், காரப்பேட்டை, பொன்னேரிக்கரை, புதிய ரயில் நிலையம் வழியாக சுற்றிக் கொண்டு, காஞ்சி நகருக்குள் செல்வதை தவிர்த்து, ஏனாத்துார்- காஞ்சிபுரம் புறவழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றன.இச்சாலையில் தனியார் பள்ளி, கல்லுாரி, பல்கலைகழகம், மருத்துவமனை, ஊராட்சி அலுவலகம், கனக துர்கையம்மன் கோவில், தனியார் தொழிற்சாலை, இந்தியன் வங்கி, தபால் நிலையம் உள்ளிட்டவை உள்ளன.மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குரவத்து அதிகம் உள்ள இந்த சாலையில் கோனேரிக்குப்பத்திற்கும், காஞ்சிபுரம் மாநகராட்சி தாமல்வார் தெருவிற்கும் இடையில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது.இதனால், ரயில் மற்றும் சரக்கு ரயில் வந்து செல்லும் நேரங்களில், ரயில்வே கடவுப்பாதை மூடப்படுவதால், இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதன் காரணமாக பள்ளி, கல்லுாரி, பணிக்கு செல்வோர் தாமதமாக செல்கின்றனர். எனவே, கோனேரிக்குப்பம் -- தாமல்வார் தெரு ரயில்வே கடவுப்பாதையின் கீழ், இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.